அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி!

பிறந்த மண்ணுக்கும் புலம்பெயர்ந்த வெளிநாட்டுக்கும் பெருமை சேர்த்து வருகிறார் தமிழுணர்வுள்ள வெற்றிச்செல்வி இராசமாணிக்கம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும்,
அமெரிக்க மண்ணில்  தமிழ்க் கல்வி!
Updated on
2 min read

பிறந்த மண்ணுக்கும் புலம்பெயர்ந்த வெளிநாட்டுக்கும் பெருமை சேர்த்து வருகிறார் தமிழுணர்வுள்ள வெற்றிச்செல்வி இராசமாணிக்கம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தங்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும், மொழி வளத்தையும் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் சமுதாய நலனும், அவற்றை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற ஆர்வமும் துடிப்பும் இவரிடம் அபரிமிதமாகவே இருக்கிறது.
 ÷திருமணம் முடித்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து சென்ற வெற்றிச்செல்வி, "கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்' என்னும் அமைப்பை நிறுவி 15 ஆண்டு காலமாக, அங்கு வசிக்கும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமன்றி, வெளிநாட்டவருக்கும் தமிழ் பயிற்றுவிக்கிறார். இத்தமிழ்க் கழகம் இன்று உலகளாவிய அளவில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.
 ÷"யார் இந்தத் தமிழ்ப் பற்றுள்ள பெண்மணி? வாழச்சென்ற நாட்டில் தமிழ் வளர்க்கிறாரே!' என்று வியந்தபோது, முன்னாள் அமைச்சர் செ.மாதவனின் மகள் என்கிற கூடுதல் தகவல் மேலும் பிரமிப்பை ஏற்படுத்தியது. பணி நிமித்தமாக சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்து, வெற்றிச்செல்வியின் வெற்றியின் ரகசியத்தைப் பற்றி கேட்டபோது...
 தாங்கள் உருவாக்கிய தமிழ்க் கழகத்தின் தோற்றம் எப்போது?
 1998-ஆம் ஆண்டு 13 மாணவர்களுடன் தொடங்கப்பட்டதுதான் "கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்' (இஹப்ண்ச்ர்ழ்ய்ண்ஹ பஹம்ண்ப் அஸ்ரீஹக்ங்ம்ஹ்). இன்று மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் இயங்கி வருகிறது. முதன் முதலில் கூப்பர்டினோவில் தொடங்கி, தற்போது அமெரிக்காவில் மட்டுமே ஆறு கிளைகளையும் பதின்மூன்று இணைக்கல்வி நிறுவனங்களையும் இயக்கி வருகிறது. ÷தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழ்ப் பண்பாடு முதலானவற்றை அமெரிக்கவாழ் தமிழ்ப் பிஞ்சு நெஞ்சங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பதும், குழந்தைகள் தமிழ் கற்பதை ஒரு சுமையாக எண்ணக்கூடாது; மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமல்ல; அவர்களை நம் மொழியைப் புரிந்துகொள்ள வைப்பதும் நேசிக்க வைப்பதும்தான் எங்களின் குறிக்கோள். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு.
 இப்படியொரு அமைப்பைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
 இதற்குக் காரணம் என் தந்தையும் அவருடைய நெருங்கிய நண்பர்களும்தான். புலம்பெயர்ந்து வாழச்சென்றவர்கள் தங்களின் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்பதற்கும், அவர்களின் பிள்ளைகள் தங்கள் தாய்மொழியை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான் இது உருவாக்கப்பட்டது.
 பாடத்திட்ட முறைகள் என்னென்ன?
 ஞாயிற்றுக்கிழமை ஒன்றரை மணி நேரம் மட்டும்தான் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 29 நாள்கள் மட்டுமே! ஒவ்வொரு வகுப்பிலும் 8:1 என்ற மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஏற்றவாறு பாடப்பகுதியை உள்ளடக்கிய பாடத்திட்டமும் வீட்டுப் பாடமும் அமைக்கப்பட்டுள்ளது. எழுதவும் வாசிக்கவும் பயிற்சியளிக்கும் வகையில் குறுந்தகடும், பாடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் தேர்வு நடத்தி மாணவர்களின் தரத்தை உறுதிப்படுத்துகிறோம்.
 ÷வெளிநாடுகளில் வாழும் குழந்தைகள் எவ்வளவு தூரம் தமிழ் பேசுகிறார்கள், தமிழ்ப் படிக்க எவ்வளவு நேரம் ஒதுக்குகிறார்கள், நம் வம்சாவளியினருக்கு எவ்வளவு தூரம் தமிழ் புரிகிறது, பெற்றோர்களுடன் எவ்வளவு நேரம் தமிழில் பேசுகிறார்கள், பெற்றோர் பிள்ளைகளுடன் எப்படி உரையாடுகிறார்கள்? போன்றவற்றை உடனிருந்து ஆராய்ந்து பாடத்திட்டத்தை வகுத்துத் தந்துள்ளவர்கள் முனைவர் பொன்னவைக்கோ, பேராசிரியர் வி.கணபதி, முனைவர் இ.கோமதிநாயகம் ஆகிய மூவர்.
 பாடத்திட்டத்தில் எந்தெந்த அணுகுமுறைகளைக் கையாள்கிறீர்கள்?
 1. அறிமுக நிலையில் உரையாடல் மூலம் கற்பித்தல்.
 2. உடன் நிகழ்வாகவே பொதுவான கதைகளையும், கவிதைகளையும் வாசிக்கவும், எழுதவும் தூண்டுதல்.
 3. தமிழ் நாட்டுக்கே உரித்தான கலையையும், பாரம்பரியத்தையும் அறிமுகப்படுத்துதல்.
 4. மொழிவளம், பண்பாடு, கலாசாரத்தை அறிமுகப்படுத்துதல்.
 தமிழ்க் கல்வியைத் தவிர வேறு கலைகளில் ஈடுபடுத்துவதுண்டா?
 ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழா, பொங்கல் திருநாள், ஹாலோவீன், கிறிஸ்துமஸ், தீபாவளி திருநாள் ஆகியவை கொண்டாடப்படுகிறது. மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தவும், நாடகம், பாடல், நடன வடிவங்களில் கற்றல் வழிமுறைகளில் வேடிக்கையினைச் சேர்க்கவும், கலாசார விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
 வெற்றியின் ரகசியம்..?
 கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தில் பணிபுரியும் அனைவரும் தன்னார்வத் தொண்டூழியர்கள். மொழிப்பற்றும் புரிதலும் மிக்கவர்கள். மொழிப்பற்றுதலும் கல்வியில் புதுமை படைக்கும் சிந்தனையுமே அடிப்படையாக இருந்தாலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆர்வமும், ஒத்துழைப்புமே இதன் வெற்றியின் ரகசியம்.
 எந்த மாதிரியான திட்டங்கள் உள்ளன?
 ÷"தமிழ்ப் படிப்பதால் என்ன நன்மை?, நாங்கள் ஏன் தமிழ்ப் படிக்க வேண்டும்? திருக்குறள் படித்து என்ன செய்யப் போகிறோம்? ழ, ல, ர, ற உச்சரிப்பு (எழுத்துகள்) தேவையா? ஒரே எழுத்தைப் பயன்படுத்தினால் என்ன? பேச்சுத் தமிழா? எழுத்துத் தமிழா?' இப்படி பல வினாக்களை எழுப்புகின்றனர். இதற்கு தீர்வுகாணும் வகையில் சென்ற ஆண்டு முதல் மாநாட்டை நடத்தினோம். அதன் தீர்மானங்கள் நிறைவேறிய பிறகுதான் அடுத்த மாநாடு என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
 தந்தையிடமிருந்து தாங்கள் கற்றுக்கொண்டவை...?
 தந்தை அடிக்கடி கூறுவார் ""நேர்மைதான் மிகப்பெரிய சொத்து. விலை கொடுத்து வாங்க முடியாத அன்பு ஒன்றுதான் உலகில் மிகப்பெரியது. "தான்' என்ற எண்ணம் எப்போதும் கூடாது. கோபப்படும் போது, கோபத்துக்கு ஆளானவர்களின் நிலையில் உன்னை வைத்துப்பார். அப்போது உனக்குப் பரிதாபம்தான் வரும். எதையுமே சட்டப்படித்தான் செய்யவேண்டும்'' என்பார். என் தந்தையின் அறிவுரைகளும் வழிகாட்டுதலினாலும்தான் "கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்' தற்போது உலகளாவிய அளவில் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.
 - இடைமருதூர் கி.மஞ்சுளா
 படங்கள்: "கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்' - இணையதளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com